ட்ரெண்டிங்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இனி இந்த ரூல்ஸ் கட்டாயம்!

 

சேலம் கலெக்டர் அலுவலகம் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்

விதிமீறல்களுக்கு அபராதம்; வாகன நிறுத்தத்திற்கும் கட்டுப்பாடு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திங்கட்கிழமை தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வந்தால் விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கட்டுப்படுத்தும் வகையில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.