ட்ரெண்டிங்

வாகன சோதனை- மாவட்ட ஆட்சியர் விடிய விடிய ஆய்வு! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. நேற்று முன்தினம் (ஏப்ரல் 07) இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப் பின், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெரிவித்ததாவது, 
மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறது. பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்வை குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள், கணக்கு சரிபார்ப்பு குழுக்கள், உதவி செலவின மேற்பார்வைக் குழுக்கள் என பல்வேறு குழுக்கள் மாவட்டம் முழுவதும் GPS கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அலுவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 07) வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இரவு முழுவதும் அயோத்தியாப்பட்டணம், சன்னியாசிகுண்டு, மேட்டுப்பட்டிதாதனுர், வாழப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படைகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருவதை ஆய்வு செய்யப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும் படையினர் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பணியினை தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் அலுவலர்கள் இதற்குரிய அறிக்கையினை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.