ட்ரெண்டிங்

கழிவுநீரில் அடித்து வரப்பட்ட ஆண் சிசு உடல்; சேலத்தில் பரபரப்பு !

 

சேலத்தில் சாக்கடை கால்வாயில் அடித்து வரப்பட்ட ஆண் சிசுவின் உடல்

குப்பைகளை அகற்றியபோது தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி; போலீசார் விசாரணை

சேலம்: சேலம் குகை தொல்காப்பியன் தெருவில், கழிவுநீர் கால்வாயில் அடித்து வரப்பட்ட பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசுவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக குகை தொல்காப்பியன் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயிலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து தேங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை தேங்கிய நீர் வடிந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது குப்பைகளுடன் பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசுவின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசுவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசுவின் உடல் எங்கிருந்து அடித்து வரப்பட்டது? கால்வாயில் வீசியது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் கால்வாயில் ஆண் சிசுவின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.