சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 500- க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர்ந்து 12- வது நாளாக அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களுடன் மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் ஆதரவு தெரிவித்து சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு வடமேற்கு ஆகிய மாவட்டங்கள் சார்பில் இன்று (மார்ச் 11) காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
த.வெ.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் என 1,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது JUST NOW SALEM செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த த.வெ.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன், காவல்துறையினரிடம் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டோம்; ஆனால் அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து இன்று மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்தியுள்ளோம். தி.மு.க. அரசு 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்கிறது; இதற்கு உதாரணம் தொழிலாளர்களின் போராட்டம். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை கடந்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.



-hcTFAGMRGb.jpg)