சேலத்தில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் – மூக்கனேரியில் விசர்ஜனம்
சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூக்கனேரியில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
சேலம் மாநகரில் இந்து முன்னணி சார்பில் 1,300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் 60-க்கும் மேற்பட்ட வாகனங்களில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது.
தாரை, தப்பட்டை முழங்க நடைபெற்ற ஊர்வலத்தில் பெண்கள் விளக்குகளை ஏந்தியும், சிறுவர்கள் பல்வேறு வேடங்களில் பங்கேற்றும் சென்றனர். அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக மூக்கனேரியை அடைந்த சிலைகள், ஒன்றன்பின் ஒன்றாக நீர்நிலையில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
ஊர்வலத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ஊர்வலப் பாதையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.



-hcTFAGMRGb.jpg)