சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.6.12 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம்
சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ.6.12 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முழு உடல் பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த மையத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை நான்கு வகையான முழு உடல் பரிசோதனை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோல்ட் திட்டத்தில் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகளும், டைமண்ட் திட்டத்தில் இதய மின் ஒலி வரைவு, தைராய்டு உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். பிளாட்டினம் திட்டத்தில் டிஜிட்டல் மார்பக நுண்கதிர் மற்றும் எலும்பு பரிசோதனைகளும், பிளாட்டினம் பிளஸ் திட்டத்தில் கண் மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளைவிட குறைந்த கட்டணத்தில் தரமான பரிசோதனைகள் வழங்கப்படும் என்றார். நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வருவதற்கு முன்பே உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்காக அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தேவையான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்றும், மாநகராட்சி மக்களுக்கு வீட்டிலிருந்தபடியே பரிசோதனை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
“மக்களின் வரிப்பணம் கரப்ஷன், கமிஷன் இல்லாமல் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இது தூய்மையான அரசு” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள், மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



-hcTFAGMRGb.jpg)