வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2025 இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஆகஸ்ட் 29) மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிட்டார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்ததாவது,
சேலம் மாவட்டத்தில் உள்ள 3,257 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த வகையில் தேவைக்கேற்ப புதியதாக 7 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் செய்யவும், 39 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் (Section Change) செய்யவும், 10 வாக்குச்சாவடிகளை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யவும், 19 வாக்குச்சாவடிகளை கட்டிட மாற்றம் செய்யவும் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.
மேற்படி வாக்காளர் பதிவு அலுவலர்களின் பரிந்துரையின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருப்பினும், மேலும் புதிய ஆலோசனைகள் இருப்பின், அதனை எதிர்வரும் 04/09/2024 பிற்பகல் 05.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும்/ மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் அளித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், குடியிருப்பு சங்கங்கள் பொதுமக்களிடமிருந்து பட்சத்தில் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் வரப்பெறும் அவை இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு பரிசீலனை செய்து இறுதி செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு
பரிந்துரை செய்யப்படும்.
மேலும் 01/01/2025- ம் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Roll) 29/10/2024 அன்று வெளியிடப்படவுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். இதன்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய 4 தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திடலாம். 17 வயது நிரம்பிய நபர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 பூர்த்தியாகும் அடுத்த காலாண்டில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி தற்போது 100% வீடு வீடாகச் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்படி கணக்கெடுப்பிற்கு வரும்போது பொதுமக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


