மூதாட்டிக்கு தனது கண்ணாடியை அணிவித்து மகிழ்ந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்
மேட்டூர்: மேட்டூர் அணையை திறந்து வைத்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே உள்ள சின்னக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, விவசாயப் பணிகள் மற்றும் அவர்களது வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி ராமசாமியின் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்து, அவரை தங்களது தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் முதலமைச்சரின் கையை அன்புடன் பிடித்துக் கொண்டார்.
அப்போது மூதாட்டியின் அன்பை கண்டு நெகிழ்ந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அந்த மூதாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த மூதாட்டி, முதலமைச்சரின் கன்னத்தை வருடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகள் மற்றும் ராமசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர் மூதாட்டியின் வீட்டிலிருந்து புறப்பட்ட முதலமைச்சரை, அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து முதலமைச்சரின் கையை பிடித்தபடி பிரதான சாலை வரை அழைத்து வந்து வழியனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மூதாட்டிக்கு தான் அணிந்திருந்த கண்ணாடியை முதலமைச்சர் அணிவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



-SXgDfGgJfO.jpg)