தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்ட புறநகர் வழித்தடத்திற்கு 6 புதிய பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (நவ.08) துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயனடையும் வகையில் பழைய பேருந்துகளை மாற்றம் செய்து அதற்கு பதிலாக புதிய BS-6 வகை பேருந்துகளாக இயக்க தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தற்சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் புறநகர் வழித்தட பேருந்துகளுக்கு பதிலாக 6 எண்ணிக்கையிலான புதிய BS-6 வகை புறநகர் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு 3 புதிய பேருந்துகளும், சேலத்திலிருந்து சென்னைக்கு 2 புதிய பேருந்துகளும், சேலத்திலிருந்து மதுரைக்கு ஒரு புதிய பேருந்தும் 6 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சேலம் மாவட்டத்திற்கு 15 நகரப் பேருந்துகளும், 76 புறநகரப் பேருந்துகளும் எ மொத்தம் 91 புதிய RS-6 வகை புறநகர் பேருந்து சேவைகள் தொங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 30.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)