ட்ரெண்டிங்

சேலம் ஆவினில் நெய் விவகாரம் – துணை பொதுமேலாளர் சஸ்பெண்ட் !

 

 

சேலம் ஆவினில் 40 லிட்டர் நெய் விவகாரம்: துணை பொதுமேலாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் ஆவின் நிறுவனத்தில் இருந்து நெய் மற்றும் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை முறைகேடாக வெளியே கொண்டு சென்று விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அங்கு துணைப் பொதுமேலாளராக பணியாற்றி வந்த சாரதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் ஆவின் நிறுவனத்தில் துணைப் பொதுமேலாளராக பணியாற்றி வந்த சாரதா மீது, ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நெய் மற்றும் வெண்ணெய் டப்பாக்களை சில அலுவலர்களின் உதவியுடன் மறைத்து வைத்து வெளிச் சந்தையில் விற்பனை செய்து வருவதாக கடந்த சில மாதங்களாக புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கிடைத்த தொடர் புகார்களின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் சாரதாவின் அலுவலக அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவரது மேஜை டிராயரில் சுமார் 40 லிட்டர் நெய் டப்பாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அவரது அறையில் இருந்து நெய் பாட்டில்கள் எடுக்கப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, சேலம் ஆவினில் பணியாற்றி வந்த துணைப் பொதுமேலாளர் சாரதாவை சஸ்பெண்ட் செய்து பால்வளத்துறை நிர்வாக இயக்குனர் அஜய் யாதவ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் ஆவின் நிறுவனத்தில் துணைப் பொதுமேலாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.