ட்ரெண்டிங்

ரூ.3 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல அனுமதி: சேலம் வியாபாரிகள் கோரிக்கை

 

சேலம்:

சேலம் செவ்வாய்பேட்டை மளிகை ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பில் தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். பொருட்கள் கொள்முதல் செய்ய பணம் எடுத்துச் செல்லும் போது தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, உரிய ஆவணங்கள் காட்டுமாறு கூறுவதாகவும், ஆனால் அவை என்ன ஆவணங்கள் என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சேசன் காலத்தில் ரூ.50,000 வரை பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன் பிறகு அந்த வரம்பு உயர்த்தப்படாததால் தற்போதைய சூழலில் வியாபாரிகள் கடும் சிரமம் அனுபவித்து வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், சரக்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் ரூ.3 லட்சம் வரை பணமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரிய வியாபாரிகள் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய முடிந்தாலும், சிறு வியாபாரிகளுக்கு அதற்கான விழிப்புணர்வு இல்லாததால் சிக்கல் நிலவி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.