துணை மேயர் இருக்கையை அகற்ற மேயர் உத்தரவு – எதிர்ப்பு தெரிவித்து தர்ணா
சேலம்: சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற இருந்த நிலையில், துணை மேயர் இருக்கையை மாற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் கூட்டம் நடைபெறாமல் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில், சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக மேயர் ராமச்சந்திரன் கூட்டரங்கிற்கு வந்தார். அப்போது, மேயர் இருக்கைக்கு அருகில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் சாரதா தேவி அமருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேயர், கடந்த மாமன்ற கூட்டத்திலேயே அந்த இருக்கையை அகற்ற உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
ஆனால், மாநகராட்சி ஆணையாளர் அந்த இருக்கையை அகற்றாமல் துணை மேயர் அதே இடத்தில் அமர வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், "அதிகாரம் இல்லாத இந்த கூட்டத்தை நான் நடத்த மாட்டேன்" என மேயர் ராமச்சந்திரன் கூறி, மேயர் இருக்கைக்கு செல்லாமல் கவுன்சிலர்களுடன் அமர்ந்தார்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் துணை மேயர் இருக்கையை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை மேயர் சாரதா தேவி, தனது இருக்கையை அகற்ற அனுமதிக்க முடியாது எனக்கூறி மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து துணை மேயர் சாரதா தேவி கூறுகையில், "நான் பெண் என்பதால் மேயர் எனக்கு உரிய மரியாதை வழங்குவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக மேயர் இருக்கைக்கு அருகில் எனது இருக்கை இருந்து வருகிறது. தற்போது திடீரென ஏன் அந்த இருக்கையை அகற்ற வேண்டும்? எனது இருக்கையை அகற்ற நான் அனுமதிக்க மாட்டேன். இந்த மன்றத்தை நான் மதிக்கிறேன்" என்றார்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர், மேயர், துணை மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தனி அறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியே வந்த துணை மேயர் சாரதா தேவி, தனது இருக்கையை அகற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், "சேர் வேண்டுமா, ஷேர் வேண்டுமா?" என கேட்கிறார்கள். எனக்கு சேர் தான் வேண்டும் என தெரிவித்து விட்டேன்" என்றார்.
தொடர்ந்து கூட்டரங்கிற்கு வந்த மேயர் ராமச்சந்திரன், கூட்டம் நடைபெறாததால் மாமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து தீர்மானங்களும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளிநடப்பு செய்தார்.
இதனிடையே, தனது இருக்கையை அகற்றக் கூடாது என வலியுறுத்தி துணை மேயர் சாரதா தேவி தொடர்ந்து மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.



