ட்ரெண்டிங்

சேலத்தில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம் !

 

சேலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை

சேலம்: கேரள மாநில மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம், சேலம் மாநகரில் வசிக்கும் மலையாள மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கேரளாவில் ஆண்டுதோறும் 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக அத்தப்பூ கோலமிட்டு வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாள மக்களும் பல்வேறு பகுதிகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் சங்கர் நகர் பகுதியில் உள்ள கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை விமரிசையாக நடைபெற்றது.

இதில் பெண்கள் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து, வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, சேலம் வாழ் கேரள மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பரிமாறி ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல், சேலம் சாஸ்தா நகரில் உள்ள ஐயப்பன் கோவில் ஆசிரமத்திலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமான அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அத்தப்பூ கோலத்தின் அருகே குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

சேலத்தில் வசிக்கும் கேரள மக்கள் பாரம்பரியத்தைப் பேணும் வகையில் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடியது, அப்பகுதியில் பண்டிகை உற்சாகத்தை ஏற்படுத்தியது.