தலைமைச் செயலாளரை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டத்தை தனியார் மயமாக்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இடதுசாரி மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகளின் போராட்டங்களை கண்காணிக்குமாறு கல்லூரிகளுக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சுற்றறிக்கையை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும் என்றும் சண்முகம் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார் வழங்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுவதை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



-hcTFAGMRGb.jpg)