அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? – ஆபரேட்டர்கள் சந்தேகம்
சேலம்: அரசு கேபிள் டிவி சேவையில் தொடரும் சர்வர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் தாமோதரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் தாமோதரன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் அரசு கேபிள் டிவி இணைப்புகள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சமாக குறைந்துள்ளது. இத்தொழிலை நம்பி 1,400 கேபிள் ஆபரேட்டர்களும், சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக அரசு கேபிள் டிவி சேவையில் சர்வர் பிரச்சினை காரணமாக சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதிலும், கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிப்பதிலும் ஆபரேட்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோன்ற சர்வர் பிரச்சினை ஏற்பட்டதாகவும், ஆபரேட்டர்கள் போராட்டம் நடத்திய பின்னர் பிரச்சினை சரிசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், அரசு கேபிள் நிறுவனம் தனியார் சர்வர் நிறுவனத்திற்கு உரிய தொகையை செலுத்தாததே சிக்னல் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினார்.
அரசு கேபிள் டிவி இணைப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதும், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதும், அரசு கேபிள் டிவி தொழிலை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சிக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சர்வர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என தாமோதரன் தெரிவித்தார்.



-hcTFAGMRGb.jpg)