அரசுக்கு 23-ம் தேதி வரை கெடு: 24-ம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டம் – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
சேலம், ஆக.18:
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதுடன், விற்பனை விலையையும் ரூ.15 உயர்த்த வேண்டும், பால் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு ஆண்டுதோறும் விலை உயர்வு வழங்க வேண்டும், சங்க நிர்வாக செலவுக்கான மார்ஜின் தொகையை 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
“ஆவினுக்கு பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.43-ம், எருமைப்பாலுக்கு ரூ.60-ம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, வரும் 23-ம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று உரிய விலை உயர்வு வழங்க வேண்டும். இல்லையெனில், 24-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பால்வளத்துறையின் மானியக் கோரிக்கை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. அதுவரை காத்திருக்க முடியாது. எனவே, முதலமைச்சர் உடனடியாக 110 விதியின் கீழ் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அறிவிக்க வேண்டும்” என்றார்.
இதனால், பால் உற்பத்தியாளர்களின் போராட்ட அறிவிப்பு ஆவின் பால் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



