சேலத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பாதுகாப்பு அம்சங்கள் சரிபார்ப்பு கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலத்தில் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு நடைபெற்றது.
சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஜவகர் மில் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் கட்டாய பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து விரிவாக பரிசோதிக்கப்பட்டது.
குறிப்பாக, வாகனங்களில் அவசர கால வெளியேறும் வழி வசதி, தீ அணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி, வேக கட்டுப்பாட்டு சாதனம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செயல்படுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், வாகனங்களின் பிரேக் அமைப்பு, டயர்கள், இருக்கை வசதிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக ஏறி இறங்கும் வசதிகளும் சரிபார்க்கப்பட்டன.
இதனுடன், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், அனுபவச் சான்று மற்றும் மருத்துவ தகுதி உள்ளிட்ட விவரங்களும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டன.
மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும், அரசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.



-SXgDfGgJfO.jpg)