ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் நிவாரணப் பொருட்கள்!

 

சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

 

சென்னையில் மிக்ஜாம் புயல் சீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி சேலம் மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தால் ஆவின் பால் பவுடர், வாட்டர் பாட்டில், பிரட், பிஸ்கட், ஹெல்த் டிரிங் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய 2,000 எண்ணிக்கையிலான நிவாரணத் தொகுப்பை சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் அட்டைப்பெட்டிகளில் முறையாக அடுக்கி அனுப்பும் பணியினை இரவு முழுவதும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

 

இப்பணி இன்று (டிச.06) அதிகாலை 04.00 மணிக்கு முடிவடைந்து, முதற்கட்டமாக லாரி மூலம் சென்னைக்கு நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அனுப்பி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இன்று காலை 11.00 மணிக்கு 3,000 எண்ணிக்கையிலான நிவாரணத் தொகுப்பு ஏற்றப்பட்ட லாரி சென்னைக்கு வழியனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், தேவைக்கு ஏற்ப சென்னைக்கு நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் ஆட்சியர் மரு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப.. அவர்கள். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் கீதாபிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவளார் இரவிக்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், உதவி ஆணையர் (கலால்) மாறன் உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியினை இரவு, பகலாக மேற்கொண்டனர்.