புதிய அரசின் வேளாண், நிதிநிலை அறிக்கையில் பல நல்ல அம்சங்கள்: முத்தரசன்
சேலம், ஆக. 12:
புதிய அரசின் வேளாண் மற்றும் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு நல்ல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு பிரசாரம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக சேலம் பனமரத்துப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயண பிரசாரம் நடைபெற்றது. இதில் முத்தரசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சட்டமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார். அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒற்றுமையை உருவாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசின் வேளாண் மற்றும் நிதிநிலை அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் உள்ளதாக குறிப்பிட்ட முத்தரசன், பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டு சேலை வழங்கும் திட்டம், வீடு கட்டுவதற்கான நிதியுதவியை ரூ.5 லட்சமாக உயர்த்தியது, மீனவர்களுக்கான நிதியுதவியை ரூ.6 ஆயிரமாக உயர்த்தியது ஆகியவை வரவேற்கத்தக்கவை என்றார்.
அதேநேரத்தில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மின் கட்டண விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்தரசன் கேட்டுக்கொண்டார்.



-hcTFAGMRGb.jpg)