குடியிருப்பு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
சேலம் சிவதாபுரம் இந்திரா நகர் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சூரமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளும், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியும் உள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே சுடுகாடாக பயன்படுத்தப்பட்டு வரும் குறுகிய நிலப்பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்க நிலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினர்.
சுடுகாடு பயன்பாட்டுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால், இத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்புச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சரவணன், சதீஷ், ராஜேஷ், ஆனந்த் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



-hcTFAGMRGb.jpg)