ஆதார் முடக்கம், கடன் தொகை தொடர்பாக மிரட்டல் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சார்வாய்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள், தங்களது மகளிர் சுயஉதவிக் குழுவின் பெயரில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சார்வாய்புதூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து “குங்குமசிமிழ்” என்ற பெயரில் மகளிர் சுயஉதவிக் குழுவை நடத்தி வந்துள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு குழுவுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ரூ.2 லட்சம் கடன் பெற்று முறையாகத் திருப்பிச் செலுத்தியதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ரூ.4 லட்சம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகையையும் முழுமையாக செலுத்திவிட்டதாகவும் கூறினர். இருப்பினும், மேலும் ரூ.93 ஆயிரம் பாக்கி இருப்பதாகக் கூறப்பட்டதால், அந்தத் தொகையையும் செலுத்தியதாகவும் தெரிவித்தனர். ஆனால், ரூ.93 ஆயிரம் தங்களது குழுவின் கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
மேலும், தங்களது குழுவினரின் அனுமதியின்றி ரூ.2 லட்சம் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், குழுவில் உள்ள பெண்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் பெறாத கடனை தங்களையே செலுத்துமாறு வற்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
தங்களது குழுவுக்கு விஜி மற்றும் மலர் ஆகியோர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்ததாகவும், அவர்களின் மேற்பார்வையில் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர். ரூ.93 ஆயிரத்தை வேறு ஒரு குழுவின் பெயரில் செலுத்துமாறு மலர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியதாகவும் கூறினர்.
தற்போது விஜி களஞ்சியம் பணிகளில் இல்லை என்றும், அவரால் அல்லது சம்பந்தப்பட்ட அமைப்பில் உள்ள அதிகாரிகளால் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.
எனவே, தங்களுக்கு வரும் வங்கி தொடர்பான மிரட்டல்களைத் தடுத்து நிறுத்தவும், ஆதார் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நீக்கவும், தங்களது பெயரில் புதிய கடன்கள் பெறப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த புகார் மனு அளிக்கும் போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உடனிருந்தனர்.



-hcTFAGMRGb.jpg)