திருமணம் செய்வதாக கூறி ரூ.3 லட்சம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி மோசடி செய்ததாக புகார்: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயற்சி
சேலம்: திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.3 லட்சம் மற்றும் ஒரு கிலோ வெள்ளியை பெண் ஒருவர் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் திருவாக் கவுண்டனூர் அம்மாசி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (44), மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் சிலர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவரது வெள்ளிப் பட்டறையில் வேலைக்கு சேர்ந்ததாகவும், கணவரை இழந்த அந்த பெண் தன்னுடன் பழகி வந்ததாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக சங்கீதா கூறியதாகவும், இதனை நம்பி அவரிடம் இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் பட்டறையில் இருந்த ஒரு கிலோ வெள்ளியை அவர் பெற்றுக்கொண்டதாகவும் கிருஷ்ணமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி தன்னை அலைக்கழித்ததாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திலும் புகார் அளித்ததாகவும், அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னிடம் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



-SXgDfGgJfO.jpg)