ட்ரெண்டிங்

குடிநீர் தனியார்மயத்திற்கு எதிர்ப்பு: அழகு குத்திக்கொண்டு மனு!

 

குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு: அழகு குத்திக்கொண்டு நூதன முறையில் மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கும் வகையில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் பார்த்திபன் இன்று மனு அளிக்க வந்தார். குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆடி மாதத்தை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதல் வைத்து, அழகு குத்திக்கொண்டு நூதன முறையில் மனு அளிக்க வந்தார்.

அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செல்லவிடாமல் காவல்துறையினர் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் பார்த்திபன், சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை தனியார் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

குடிநீர் என்பது பொதுமக்களின் அடிப்படை உரிமை என்பதால், அதன் விநியோகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். 

இதனை கண்டித்து, ஆடி மாதத்தில் கோட்டை மாரியம்மனுக்கு வேண்டுதல் வைத்திருந்ததால், அதன்படி அழகு குத்திக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்ததாகவும் பார்த்திபன் தெரிவித்தார்.