யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க சேலம் கலெக்டர் அலுவலகம் வந்த முதியவர்,இதுவரை ரூ.1.65 கோடி வழங்கியதாக தகவல்
சேலம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் புல் பாண்டியன் (75). இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நகரங்களில் யாசகம் பெற்று, அந்த பணத்தை பொது சேவைக்காக வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கோவையில் யாசகம் பெற்று சேகரித்த ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புல் பாண்டியன் வந்தார். யாசகம் பெறும் தோற்றத்தில் இருந்த அவரை, கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். தொடர்ந்து, அதிகாரியை சந்தித்த புல் பாண்டியன், தன்னிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
இதுகுறித்து புல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. எனது மனைவி சரஸ்வதி இறந்துவிட்ட நிலையில், தற்போது தனியாக வசித்து வருகிறேன்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் யாசகம் பெற்று வருகிறேன். தனி மனிதனாக வாழும் எனக்கு அதிக அளவில் பணம் தேவையில்லை. எனவே, யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை பொது சேவைக்காக வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை அந்தந்த மாவட்டங்களில் உள்ள பல்வேறு பொது நலத் திட்டங்களுக்கு வழங்கி வருகிறேன். கொரோனா காலகட்டத்திலும் யாசகம் மூலம் கிடைத்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன்.
மேலும், தமிழகம் முழுவதும் 470 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காகவும் யாசகம் மூலம் கிடைத்த பணத்தை வழங்கியுள்ளேன்.
தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறேன். அந்த வகையில், கடந்த மாதம் கோவையில் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன்.
எனது குழந்தைகள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதால், எனக்கு அதிக அளவில் பணம் தேவையில்லை. இதனால் தொடர்ந்து யாசகம் பெற்று, மக்களின் நலனுக்காக நிதியுதவி செய்து வருகிறேன். கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை சுமார் ரூ.1 கோடியே 65 லட்சம் வரை பொது சேவைக்காக வழங்கியுள்ளேன்.
தொடர்ந்து யாசகம் பெற்று, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் சென்று மக்களின் சேவைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குவேன் என புல் பாண்டியன் தெரிவித்தார்.



-SXgDfGgJfO.jpg)