ட்ரெண்டிங்

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு! 

விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித்திட்டத்தில் இதுவரை பயனடையாமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகளைச் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற சிறப்பு முகாம் வரும் மே 31- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின்கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகங்கள், இந்திய அஞ்சல் கட்டண வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் வரும் மே 31- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இத்திட்டத்தில் 20- வது தவணை வரும் ஜூன் மாதத்தில் வழங்க உள்ளதால் இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விவரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது, இகேஒய்சி போன்ற அனைத்து விதமான முழுமையற்ற விவரங்கள் சரிசெய்து விவசாயிகள் பயன்பெறலாம். அதேபோன்று, தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 

மேலும், சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம் கிசான் 19 தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 28,873 விவசாயிகள் நில உடமை பதிவுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். இவ்விவசாயிகள் நில உடமை பதிவுகளை மேற்கொண்டால் 20-வது தவணைத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

பி.எம் கிசான் திட்டத்தில் இறந்த பயனாளிகளின் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். பயனாளிகள் இறந்த பிறகும் தவணைத் தொகையை பெற்று வருவது ஆய்வில் தெரியும் பட்சத்தில், அத்தொகையை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே, இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து, திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். மேலும், இறந்த பயனாளிகளின் வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.