ட்ரெண்டிங்

சேலத்தில் 42-வது அரசு பொருட்காட்சி தொடக்கம் !

 

சேலத்தில் 42-வது அரசு பொருட்காட்சி தொடக்கம் 45 நாட்கள் நடைபெறும் பொருட்காட்சியில் 31 அரங்குகள் அமைப்பு

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் 42-வது அரசு பொருட்காட்சி நேற்று தொடங்கியது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த அரசு பொருட்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 227 பயனாளிகளுக்கு ரூ.7.72 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், சேலம் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

31 அரங்குகள்:-

சேலம் அரசு பொருட்காட்சியில் சேலம் மாநகராட்சி, செய்தி மக்கள் தொடர்புத் துறை, போக்குவரத்துத் துறை, பள்ளிக்கல்வித் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட 26 அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆவின் உள்ளிட்ட 5 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் 31 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியில், அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள் மற்றும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் அரசு பொருட்காட்சி நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் நேரடியாக அறிந்து பயன்பெறும் வகையில் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.