மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் – சேலம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என சேலம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அபயா தினத்தை முன்னிட்டு, சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பில் டாக்டர் சரவணகுமார், செயலாளர் தேவி ஸ்ரீ, இணைச் செயலாளர் சுந்தர மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
ஆகஸ்ட் 9-ஆம் தேதி அபயா தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதுடன், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான பல்வேறு சமூக அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் கூட்டு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகள் புனிதமான இடங்களாக கருதப்பட வேண்டும். அங்கு பணியாற்றும் பெண்கள் கண்ணியத்துடனும், அச்சமின்றியும் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையும் அனுமதிக்கக் கூடாது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மறுவாழ்வு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பெண்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்து, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் போதிய மின் விளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பெண்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



-hcTFAGMRGb.jpg)