பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் சென்னையில் 15 ஆயிரம் பேருடன் முற்றுகை போராட்டம்
சேலம்: பால் கொள்முதல் விலையை உடனடியாக ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையெனில் சென்னையில் 15 ஆயிரம் பேருடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் நலச்சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் தளவாய்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் சங்க நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், பெரியண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் மாநில தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் ஆவின் நிறுவனமும், பால் உற்பத்தியாளர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பட்ஜெட்டில் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதற்கிடையே தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளதால், ஆவினுக்கு பால் வழங்கி வந்த உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கான மானியத்தையும் ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும். உரிய விலை கிடைக்காவிட்டால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, ஆவின் நிறுவனம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும்.
மற்ற மாநிலங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புறங்களில் பால் உற்பத்தித் தொழில் மேலும் வளர்ச்சி பெறும்.
எங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் தமிழ்நாடு ஆவின் பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் செல்லகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



