ட்ரெண்டிங்

"உணவினை ருசிப் பார்த்து பின்னர் வழங்க வேண்டும்" - அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அ

"உணவினை ருசிப் பார்த்து பின்னர் வழங்க வேண்டும்" - அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தல்! 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. 

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., "தமிழ்நாடு முதலமைச்சரால், கடந்த 2022- ஆம் ஆண்டு மே மாதம் 6- ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசுப் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 54 தொடக்கப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக, நடப்பாண்டு மார்ச் 1- ஆம் தேதி அன்று 24 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் என மொத்தம் 78 பள்ளிகளில் 6,743 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தில், திங்கட்கிழமை ரவா உப்புமா- காய்கறி சாம்பார், செவ்வாய்கிழமை சேமியா காய்கறி கிச்சடி- காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண் பொங்கல்- காய்கறி சாம்பார், வியாழக்கிழமை உடைத்த அரிசி உப்புமா - காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை கோதுமை ரவா காய்கறி கிச்சடி- காய்கறி சாம்பார் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் 2023-24 ஆம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி அன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ளதையொட்டி, தொடர்புடைய அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் தற்பொழுது 1,340 அரசு பள்ளிகளில் பயிலும் 83,291 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் விவரம்.சமையலறைக் கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு போன்றவை இக்கூட்டத்தில், விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், காலை உணவு தயாரித்தலுக்குரிய காய்கறிகள், எண்ணை மற்றும் சமையல் பொருட்களின் தரம் மற்றும் தயார் செய்யப்பட்ட உணவினை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதிச் செய்திடும் பொருட்டு, உணவினை ருசி பார்த்து பின்னர் வழங்க வேண்டுமெனவும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழரசி, மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.