ட்ரெண்டிங்

மதங்களைத் தாண்டிய மனிதநேயம்: சேலம் தேரோட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் !

 

சேலம்: கோட்டை மாரியம்மன் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு குடிநீர், இனிப்பு வழங்கிய இஸ்லாமியர்கள் – மனிதநேயத்திற்கு பாராட்டு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மோர், அன்னதானம் உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதேபோல், கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஜாமியா மஜித் நிர்வாகத்தின் சார்பில் முத்தவல்லி எஸ்.ஆர். அன்வர் தலைமையில் இஸ்லாமிய சகோதரர்கள் சிறப்பு சேவை முகாமை அமைத்தனர்.

இந்த முகாமில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்ந்த குடிநீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கடும் வெயிலில் தேரை இழுத்து வந்த பக்தர்கள் இந்த சேவையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

மத வேறுபாடுகளை கடந்து மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இஸ்லாமிய சகோதரர்கள் மேற்கொண்ட இந்தச் செயல், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த இந்த நிகழ்வு, திருவிழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது