ஆன்மிகம்

சேலம் குகை மாரியம்மன் கோயிலில் கோலாகல வண்டி வேடிக்கை !

 

ஆடி திருவிழா: சேலம் குகை மாரியம்மன் கோயிலில் கோலாகல வண்டி வேடிக்கை – பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம்

சேலம், ஆக. 6:

ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களில் நடைபெற்ற பாரம்பரிய வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 

புராணக் காட்சிகளை தத்ரூபமாக சித்தரித்த அலங்கார வண்டிகளும், தெய்வ வேடம் தரித்த பக்தர்களின் ஊர்வலமும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.

சேலத்தில் ஆண்டுதோறும் 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோட்டை மாரியம்மன் திருக்கோவிலை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா விமரிசையாக நடைபெறும். விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் திருவீதி உலா வருவதுடன், உருளுதண்டம், தீமிதி மற்றும் வண்டி வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.

அதன் ஒரு பகுதியாக குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சிக்காக பக்தர்கள் 15 நாட்களுக்கும் மேலாக விரதமிருந்து, சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களையும், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் வேடங்களையும் அணிந்தனர்.

குகைப் பகுதியில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தெய்வ வேடம் தரித்த பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களுக்கு கைகளை அசைத்து ஆசி வழங்கிய அவர்கள், புராண நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் வகையில் காட்சியளித்தனர்.

சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்த அலங்கார வண்டிகள் மாரியம்மன் கோவிலை வலம் வந்து நிகழ்ச்சியை நிறைவு செய்தன. இந்த வண்டி வேடிக்கையை காண சேலம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் குகைப் பகுதி முழுவதும் பக்தி பரவசத்தில் திளைத்தது.