ட்ரெண்டிங்

பாசன நீர் முறைகேடு: நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை !

 

திருமணிமுத்தாற்று நீரை அரசாணைப்படி பகிர்ந்தளிக்க வலியுறுத்தி நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை

சேலம், ஜூலை 31: 

திருமணிமுத்தாற்று நீரை அரசாணைப்படி பிரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர், பரமத்தி அதிமுக எம்.எல்.ஏ சேகர் மற்றும் சங்கத் தலைவர் தமிழ்மணி தலைமையில், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தாலுகாக்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் திருமணிமுத்தாறு, ஏரிகள் மற்றும் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்காடு மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. மல்லசமுத்திரம் மதியம்பட்டி தடுப்பணையிலிருந்து வெளியேறும் நீர், கீழ்பகுதியில் உள்ள கால்வாய்கள் வழியாக விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசின் அனுமதிப்படி, மல்லசமுத்திரம் சின்ன ஏரிக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டுமே உபரி நீர் திறக்க அனுமதி உள்ள நிலையில், சமீப காலமாக சிலர் அந்த நீரை விவசாயத்திற்கு அல்லாமல் வணிக நோக்கில் அதிக நாட்கள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், சின்ன ஏரியில் இருந்து பெரிய ஏரிக்கும், அங்கிருந்து அனுமதியின்றி மின்மோட்டார்கள் மூலம் திருமணிமுத்தாறு பாசனப் பகுதிக்கு அப்பாற்பட்ட ஏரிகளுக்கு நீர் எடுத்துச் செல்லப்பட்டு சட்டவிரோதமாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளதாகவும், மதியம்பட்டி தடுப்பணையிலிருந்து வரும் நீர் எந்தவித தடையும் இன்றி திருமணிமுத்தாற்றில் பாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர், விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்