ட்ரெண்டிங்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு இபிஎஸ் கண்டனம் !

 

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பாலைவனமாகும்: அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

சேலம், ஜூலை 31: 

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் தண்ணீர் திறக்காமல் தமிழகத்தை போராட வைக்கும் நிலை தொடர்கிறது என்றார்.

கர்நாடகாவின் புதிய முதல்வர் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும், அந்த அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேகதாது விவகாரம் உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதால், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய விவசாய சங்கங்களை அழைத்து ஆலோசித்து ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தாலும், கர்நாடக அரசு அதை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும், மேகதாது அணை கட்டப்பட்டால் இந்த நிலை மேலும் மோசமடையும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

விவசாயிகள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அப்படி அறிவிக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்றிணைத்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

மேலும், மருத்துவப் படிப்பில் தமிழக மாணவர்களுக்கு 151 இடங்கள் மறுக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும், இது அரசின் செயல்திறன் குறைபாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சட்டமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடு குறித்து கேட்ட கேள்விக்கு, “அதிமுகவின் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.