நீட் முறைகேட்டை கண்டித்து சேலத்தில் மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் புரட்சிகர பாடல்கள் பாடி மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கம்
சேலம், ஜூலை 24:
நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, அனைத்திந்திய மாணவர்கள் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குறிப்பாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ) சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், புரட்சிகர பாடல்களைப் பாடி தங்களது எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், கல்வியில் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



-SXgDfGgJfO.jpg)