சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சாட்டு விழாவுடன் தொடங்கிய ஆடிப்பண்டிகை
சேலம் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடிப்பண்டிகை விழா, ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் ஆடிப்பண்டிகை தொடக்கமாக பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவில், சுற்றுவட்டார மாரியம்மன் கோவில்களின் பெரிய மாரியம்மனாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
இதையொட்டி, கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த சுமார் 10 டன் மலர்களால் அம்மனுக்கு பூச்சாட்டு நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தாங்கள் கொண்டு வந்த மலர்களை சமர்ப்பித்து அம்மனை வழிபட்டனர்.
விழாவின் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதி பால்குட ஊர்வலம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆடிப்பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்க கோவில்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சேலம் மாநகர் முழுவதும் கோவில் வளாகங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கலந்து கொண்டு கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டார்.



