ட்ரெண்டிங்

சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

சேலம் மாவட்டத்தில் நேற்று (செப்.18) இரவு கனமழை பெய்தது. குறிப்பாக, சேலம் மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளான அம்மாப்பேட்டை, காமராஜர் நகர் காலனி, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, நான்கு ரோடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட், கோரிமேடு, கன்னங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இரவு 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கனமழை பெய்தது.

இதனால் மாநகரப் பகுதிக்கு உட்பட்ட 20- க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. போதிய கால்வாய், வடிகால் வசதிகள் இல்லாததே தண்ணீர் வெளியேறாததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, அம்மாப்பேட்டை முதல் பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் பிரதான சாலைகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள தெருக்களின் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்ததால், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் காரணமாக, ஆங்காகங்கே தண்ணீர் தேங்கியும், சேரும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது.

மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கும் விவசாயிகள் ஒருபுறம் இருக்க, மழை பெய்ய வேண்டாம் என்று பிரார்த்திக்கும் நிலைக்கு அம்மாப்பேட்டை மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர் என்றே கூற வேண்டும்.

எனவே, சேலம் மாநகராட்சி கால்வாய்களை அமைப்பது போன்ற சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.