ட்ரெண்டிங்

சேலம் வெள்ளி கொலுசு மையத்தில் அமைச்சர் மதன்ராஜா ஆய்வு !

 

2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு: அமைச்சர் மதன்ராஜா

தமிழ்நாட்டை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அமைச்சர் பெ. மதன்ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதற்கட்டமாக, ரூ.24.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார். 16 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட இந்த மையம், மானியம் மற்றும் ஒதுக்கீட்டு நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளது.

ஆய்வின் போது, வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆனந்தராஜன் அமைச்சரிடம் மனு அளித்து, கடைகளை 50 சதவீத மானியத்துடன் அல்லது 5 ஆண்டுகள் வட்டியில்லா கடன் தவணை முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், குடிநீர், மின்சாரம், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, மல்லூரில் செயல்பட்டு வரும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார். ரூ.2.37 கோடி முதலீட்டில், ரூ.53.57 லட்சம் மானிய உதவியுடன் செயல்படும் இந்த நிறுவனம் விமானம் மற்றும் விண்வெளித் துறைக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. உற்பத்தி நடைமுறை, மூலப்பொருட்கள், ஏற்றுமதி உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதன்ராஜா, "இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. இந்த துறையில் தமிழ்நாடு நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் அரசு பல்வேறு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா மற்றும் தொடர்புடைய அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.