சினிமா

தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம்: மோகன் ஜி குற்றச்சாட்டு !

 

தேசிய திரைப்பட விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது: இயக்குநர் மோகன் ஜி குற்றச்சாட்டு

சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு திரைப்படத் துறை தொடர்பான கருத்துகளை பகிர்ந்தார்.

அப்போது பேசிய அவர், "தவெக ஆட்சி அமைந்த பிறகு திரைப்படங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியாகின்றன. முன்பு ரெட் ஜெயன்ட் நிறுவனம் மாதத்திற்கு நான்கு திரைப்படங்கள் வரை வெளியிட்டதால், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தன. தற்போது அந்த நிலைமை இல்லை" என்றார்.

மேலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் சென்சார் சான்றிதழ் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை வரவேற்ற அவர், ஓடிடி துறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

"அந்த சந்திப்பு பாஜகவில் சேர்வதற்காக அல்ல. மத்திய அரசு ஆதரவு அளிக்கும் வேவ்ஸ் போன்ற ஓடிடி தளங்களைப் போல, தமிழ்நாடு அரசும் திரைப்படத் துறைக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய திரைப்பட விருதுகள் குறித்து கருத்து தெரிவித்த மோகன் ஜி, "தேசிய திரைப்பட விருதுகள் தேர்வில் பாரபட்சம் இருப்பதாக நீண்ட காலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை பார்க்கும்போது அந்த விமர்சனத்தை நானும் நம்புகிறேன். தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் கோவா திரைப்பட விழா விருதுகள் வழங்கும் முறையில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.