மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 02) சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் 14,56,299 ஆண் வாக்காளர்கள், 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்றையதினம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம், அஸ்தம்பட்டி, உழவர் சந்தை அருகில் மக்களவைப் பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான் டாக்டர்.பிருந்தாதேவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், மாநகர செயற்பொறியாளர் பழனிசாமி, தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர் தாமோதிரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


