ட்ரெண்டிங்

சேலத்தில் புதிய போக்குவரத்து சிக்னல்: ஹெல்மெட், குடிபோதை ஓட்டுநர்கள் மீது தீவிர கண்காணிப்ப

 

போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சிக்னல்: ஹெல்மெட், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது தீவிர நடவடிக்கை – காவல் ஆணையாளர்

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், ஓமலூர் மெயின் ரோட்டில் டிவிஎஸ் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை மாநகர காவல் ஆணையாளர் ஜோஷி நிர்மல் குமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாநகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார். ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். சாலை விபத்துகளில் உயிரிழப்பை குறைக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆடிப் பண்டிகையை முன்னிட்டு பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, பேர்லேண்ட்ஸ் உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பகல் நேரங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.போதைப்பொருள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையாளர் ஜோஷி நிர்மல் குமார் கூறினார்.