பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைக்க வேண்டும் என்றும், மகளிருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சேலம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சேலம் சொர்ணபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுந்தரேசன், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், இந்தத் திட்டம் அரசு பேருந்துகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருப்பதால் தனியார் பேருந்துகள் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக கூறினார்.
ஈரான்–அமெரிக்கா போர் உள்ளிட்ட சர்வதேச சூழ்நிலைகளால் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், 2018-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.64 ஆக இருந்த டீசல் தற்போது ரூ.102-ஐ எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும், தனியார் பேருந்துகளுக்கு அதுபோன்ற சலுகைகள் இல்லாததால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகம் முழுவதும் சுமார் 4,500 தனியார் பேருந்துகளும், 22 ஆயிரம் அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், சேலம் மாவட்டத்தில் மட்டும் 60 தனியார் பேருந்துகள் சேவையை நிறுத்தியுள்ளதாகவும், மேலும் 40 பேருந்துகள் இயக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.10 ஆக உள்ள பேருந்து கட்டணத்தை ரூ.1.20 ஆக உயர்த்த அனுமதி கோரி அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அறிமுகமான பிறகு பெண்களின் பேருந்து பயன்பாடு 34 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தினால் 24 மணி நேரமும் சேவை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும், தனியார் நிறுவனங்கள் மின்சார பேருந்துகள் வாங்க அரசு மானியம் வழங்க வேண்டும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை கட்டணத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டண விலக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், தாலுக்கா தலைவர்கள் சுப்ரமணியம், பன்னீர்செல்வம், நடராஜன் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



-SXgDfGgJfO.jpg)