ட்ரெண்டிங்

வேளாண் பட்ஜெட் கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம் !

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளை கேட்கும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், தர்மபுரி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.

அப்போது, கருத்துகளை தெரிவிக்க வேளாண்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியதாகவும், அனைத்து விவசாயிகளுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் சில விவசாயிகள் குற்றம்சாட்டினர். தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, அமைச்சர்கள் முன்னிலையிலேயே அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கூட்டத்திலிருந்து வெளியேற முயன்ற விவசாயிகளை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.