சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் எந்தவித சாயப்பட்டறையும் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி வழங்கவில்லை என்றும், எதிர்காலத்திலும் அனுமதி வழங்கப்படாது என்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஜாகிர் அம்மாபாளையம், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, விவசாயமும், சேலம் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான டால்மியா குடிநீர் திட்டமும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், சாயப்பட்டறைகளுக்கு அனுமதி இல்லை என்றும், இனியும் வழங்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் உறுதி அளித்திருப்பது, நீண்டகால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதேவேளையில், ஜவுளி பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் குறைந்த விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் முறைகேடு நடந்ததாக தகவல்கள் இருப்பதால் அரசு உரிய விசாரணை நடத்தி, உண்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.



-hcTFAGMRGb.jpg)