சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் நடந்து வரும் வாளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் திடீரென ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 58- வார்டில் பராசக்தி நகரில் இருந்து தனியார் இடமான பங்களா தோட்டத்திற்கு சென்ற கழிவுநீர்களை மாநகராட்சி இடத்திற்கு கொண்டு செல்ல நீண்டகாலமாக பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. இக்கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் பணியினை மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளுவர் நகர், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள 2 தெருக்களுக்கு கான்கீரிட் சாலை அமைத்து வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று உடனடியாக பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பார்வதி நகரில் ரூபாய் 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய வார்டு அலுவலகப்பணி முடிவு பெறும் தருவாயில் உள்ள கட்டிடத்தினை மேயர் பார்வையிட்டார். தாகூர் தெருவில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்தெருவில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் 10 எல்.இ.டி தெரு விளக்குகளும், கான்கீரிட் சாலை அமைக்கவும் மேயர் உத்தரவிட்டார்.
தாதகாப்பட்டியில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட குடிநீர் தொட்டியினை பார்வையிட்டு, குடிநீரில் உள்ள குளோரின் அளவினை பார்வையிட்டு சரியான அளவில் குளோரினை கலந்து சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென்று மேயர் கூறினார்.
ஆய்வின் போது மண்டல குழுத்தலைவர் அசோகன், மாநகர கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி ஆணையாளர் வேடியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


