ட்ரெண்டிங்

சேலம் மாநகரின் 24-ஆவது காவல் ஆணையராக ஜோசி நிர்மல் குமார் பொறுப்பேற்பு !

 

சேலம் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசி நிர்மல் குமார் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்புக்கு முன்னுரிமை என உறுதி !

சேலம் மாநகரத்தின் 24-ஆவது காவல் ஆணையராக கே. ஜோசி நிர்மல் குமார், ஐபிஎஸ், இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்ச்சி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அண்மையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சேலம் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த அணில் குமார் கிரி, ஐபிஎஸ், சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த ஜோசி நிர்மல் குமார், சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜோசி நிர்மல் குமார் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட்டு, 24-ஆவது காவல் ஆணையராக தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயர் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே தனது முதல் இலக்கு என தெரிவித்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்றும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பான மற்றும் குற்றமற்ற சேலத்தை உருவாக்க காவல்துறை தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.