ட்ரெண்டிங்

சேலம் -காலில் விழ வந்த பணியாளர்; பதிலுக்கு காலில் விழுந்த அமைச்சர்!

 

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு ஒன்றியத்தில், தமிழக முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவின் போது தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது ஒரு தூய்மை பணியாளர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து வணங்க முயன்றார். இதைத் தடுத்த அமைச்சர், பதிலுக்கு அந்த தூய்மை பணியாளரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். மேலும், யாரும் தனது காலில் விழ வேண்டாம் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் தூய்மை பணியாளர்கள் அல்ல; தூய்மை பணி செய்யும் தெய்வங்கள்" என்று பாராட்டினார். அமைச்சரின் இந்த செயல் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது.