ட்ரெண்டிங்

சேலத்தில் ரூ.38,134 கோடி கடன் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் தகவல்!

 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 2025-26 நிதியாண்டிற்கான மாவட்ட அளவிலான வங்கிகளின் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய ஆட்சித்தலைவர், பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருவதாகவும், அவற்றின் பயன்கள் தகுதியான மக்களிடம் முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சேலம் மாவட்டத்தில் 239 பொதுத்துறை வங்கிகள், 202 தனியார் வங்கிகள் மற்றும் 121 அரசு சார்ந்த வங்கிகள் என மொத்தம் 562 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகள் மூலம் 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை வேளாண்மை, கல்வி, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.38,134 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் வேளாண்மை மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25,001 கோடி, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11,320 கோடி, மாணவ–மாணவிகளுக்கான கல்விக் கடனாக ரூ.64.55 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் வங்கிகளின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், புதிய தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள் மற்றும் கல்விக் கடன் கோரும் மாணவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சித்தலைவர் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

சுயஉதவிக்குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,715 கோடி இலக்கை மீறி ரூ.1,720 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதுடன், இலக்கை விட ரூ.5 கோடி அதிகமாக கடன் வழங்கி தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜி.மிதந்தவா, ரிசர்வ் வங்கி மேலாளர் அன்பரசு, பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் அஸ்வத் துரைசெல்வம், முன்னோடி வங்கி மேலாளர் பி.செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்னா, நபார்டு உதவி பொது மேலாளர் ஷீயா, தாட்கோ மாவட்ட மேலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்