ட்ரெண்டிங்

நகைச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி- தலைமறைவாக இருந்த பெண்ணை கைது செய்தது காவல்துறை! 


சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த தம்பதி முருகவேல் (வயது 48)- கலைவாணி (வயது 40). இந்த தம்பதி அம்மாப்பேட்டையில் முத்ரா என்ற பெயரில் நகைக்கடையைத் தொடங்கி நடத்தி வந்தது. அதைத் தொடர்ந்து, மாதந்தோறும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வகையில் நகைச்சீட்டுகளையும் நடத்தி வந்துள்ளன. 

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நகைச்சீட்டுகளுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முதிர்ச்சியடைந்த நகைச்சீட்டுகளுக்கான பணத்தையோ (அல்லது) செலுத்தியத் தொகைகளுக்கு ஏற்ப தங்க நகைகளையோ வாடிக்கையாளர்களிடம் வழங்காமல், அந்த தம்பதி போக்குக் காட்டி வந்துள்ளது. 

இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள், மோசடி குறித்து சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார் கொடுத்தனர். அதில், சுமார் 100- க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 70 லட்சத்தைப் பெற்று கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அந்த தம்பதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். 

இதையறிந்த நகைக்கடை தம்பதி, தலைமறைவானது. இதைத் தொடர்ந்து, முருகவேல் மற்றும் கலைவாணியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த மே மாதம் முருகவேலை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், கலைவாணியைத் தீவிரமாக வலைவீசித் தேடி வந்தனர். இந்த நிலையில், கலைவாணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கலைவாணியை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறைத் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.