சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மூன்று மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி பகுதியில் கூலி வேலை செய்து வரும் அந்தப் பெண்ணுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவருடைய 12 வயது மூத்த மகளுக்கு, அவரது கணவர் ஆறுமுகம் கஞ்சா போதையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து கணவரைப் பிரிந்து தனது மூன்று மகள்களுடன் தனியாக வசித்து வந்த அந்தப் பெண், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த ஆறுமுகம் தன்னைச் சந்தித்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், தனது மீது அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மீண்டும் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, ஏற்கனவே புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, புதிய புகாரை ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தனது மூன்று மகள்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, தனது கணவருக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அவருக்கு ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதால் தனக்கும் தனது மகள்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



-hcTFAGMRGb.jpg)