ட்ரெண்டிங்

நீட் தேர்வை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் அனைத்து மருத்துவர்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், நீட் தேர்வை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், மாநிலங்களின் கல்வி உரிமையை பாதிக்கும் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை குறைக்கும் நீட் தேர்வு தொடரக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனை வளாகங்களில் செயல்பட்டு வரும் உணவகங்களின் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் சிலர் காலி செய்ய மறுப்பதாக கூறிய அமைச்சர், கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இனி வெளிப்படையான டெண்டர் முறையில் உணவகங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அரசியல் பின்னணி அல்லது கட்சி தொடர்பு அடிப்படையில் எவ்வித சலுகையும் வழங்கப்படாது என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.